Friday, September 20, 2013

திராவிட இயக்கங்களும் இடது சாரிகளும்.



திராவிட இயக்கங்களும் இடது சாரிகளும்.
தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்கள், அதிமுகவோடு நெருங்கிக்கொண்டிருக்கின்றன..பாண்டியன் போன்றவர்கள் அதிமுகவின் புகழ்பரப்பு செயலாளர்களாகவே செயல்படுகிறார்கள்.இதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா யாரோடும் கூட்டு இல்லை என்று அறிவித்த பின்பும்,ஒரு ராஜிய சபா MP சீட்டுக்காக போயஸ் தோட்டத்திற்கு காவடி எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார் . அகில இந்திய தலைவர் பிரகாஷ் காரத்தும் ,ஜெயலலிதாவை ,காலியாகும் ராஜிய சபா MP சீட்டுக்காகவும்,வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காகவும் சந்திந்திருப்பதாக தோன்றுகிறது .அந்த சந்திப்பிற்கு பின் அவரின் பேச்சுக்கள் அதை உறுதி செய்கின்றன . இந்த ஜெயலலிதாவுடனான கூட்டினால்,இடதுசாரி இயக்கங்களோ ,அல்லது அதன் சித்தாந்தங்களோ வலுப்பெறும் என்றால், தவறில்லை. ஆனால் இந்த கூட்டு எதில் போய் முடியும் என்று யோசிக்கிறார்களா? தெரிய வில்லை .
ஜெயலலிதாவுடன் கூட்டினால் ஏற்படும் பலன்கள் என்ன ? தமிழகத்தில் ஒருசில மக்களவை MP சீட்டுகள் இடதுசாரி இயக்கங்களுக்கு கிடைக்கலாம் .மேலும் ஒரு ராஜிய சபா MP சீட்டு கிடைக்கலாம் . இடதுசாரிகள் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் அதற்கு ஆதரவு தரலாம் , அல்லது இடதுசாரி இயக்கங்கள் அல்லாத மூன்றாவது அணியா அல்லது பாஜக தலைமையிலான அணியா என்றுவந்தால் ,அவருடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் . அவர் தனது card ஐ யாருக்கும் காண்பிக்காவிட்டாலும் அவருடைய மனநிலை எல்லோருக்கும் தெரிந்ததுதான் . காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி தவிர வேறு கூட்டணி வந்தால் ,தான் பிரதமராக வேண்டும் என்று நிச்சயம் கண்டிசன் போடுவார் . இதற்கு எல்லா இடதுசாரி இயக்கங்களும் ஒத்துக்கொள்ளுமா? த.பாண்டியன் வேண்டுமானால் ஒத்துக்கொள்வார் .



போன தேர்தலில் அவமானப்படுத்தியதையும்கூட பொருட்படுத்தாமல் ,தோட்டத்துக்கு அப்பாய்ன்ட்மென்ட் கேட்டு காத்திருக்கிறார்கள் . அது இன்னும் தொடர்கிறது .கொள்கைகளும் மரியாதையும் முக்கியமில்லை .பதவிதான் முக்கியம் இல்லை என்றால் இந்த நிலைபாடு சரிதான் .ஓரளவு கொள்கைகளில் சமரசம் செய்துக்கொண்டுதான் திமுகாவுடனோ ,அல்லது ஆதிமுகவுடனோ ,கூட்டுசேரவேண்டியதிருக்கிறது என்பதை ஒப்புகொள்கிறேன் .இரண்டுமே ஊழல் கட்சிகள் என்பதில் சந்தேகமில்லை . திமுகாவின் ஊழல் கண்ணுக்கு தெரியும்போது ,இதுவரைமுடியாதவழக்கை சந்தித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ஊழல் ஏன் தெரியவில்லை .வெறும் 66 கொடிதானே என்று ஒரு மார்க்ஸிஸ்ட் நண்பர் சொன்னார் .15 ஆண்டுகளுக்கு முன்பு 66 கொடியென்றால் அதன் இன்றைய மதிப்பு 6600 கோடி இல்லையா ? இது தெரிந்த குற்றம் சாட்டப்பட்ட மதிப்புதான் .தெரியாதவை எத்தனை ஆயிரம் கோடியோ ? இப்போதும் ஜெயலலிதா அரசில் ஊழலே இல்லை என்று இடதுசாரிகள் நம்புகிறார்களா ? எல்லோருக்குமே தெரியும் இது ஒரு 15% கமிசன் அரசு என்பது .10% கமிசன் அரசாக இருந்தது இப்போது 15% அரசாக வளர்ந்திருக்கிறது என்பதை அரசின் சம்மதங்களுக்கு காத்திருப்பவர்களுக்கு நன்குதெரியும் .தென்மாவட்டங்களில் கனிமவளங்கள் சுரண்டப்படுவதில் எல்லோருக்குமே பங்குண்டு .அம்மாவின் கண்துடைப்பு விசாரணைகள் , அதிகாரிகள் இடமாற்றங்கள் யாரும் அறியாதது இல்லை . த.பாண்டியன் போன்றவர்கள் அம்மாவின் ஆட்சியின் அவலங்களை வசதியாக மறுப்பதும், நல்லாட்சி நடக்கிறது என்றும் ஸர்டிஃபிகேட் கொடுப்பதும் ஏன்? சமய,பொருளாதார ஆதிக்க சக்திகள் அதன் பின்னால் நிற்பது இடது சாரிகளுக்கு ஏன் தெரியவில்லை ?
காவி ஏஜென்ட் சோ ,அம்மாவோடு 35 நிமிட சந்திப்புக்கு பின்னால் நடந்தது என்ன ?அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக மதவாத சக்திகளால் அறிவிக்கப்பட்டிருக்கிறார் .மோடி அம்மையாரின் நெருங்கிய நண்பர் .இது மதவாத சக்திகளுக்கு மிக அருகில் இருப்பவர் அம்மையார் என்பதை மறுப்பதற்கில்லை . இடதுசாரிகள் ஆதரித்து வென்றபின் ,காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டால் ஜெயா எங்குபோவார் என்பது எல்லோருக்கும் தெரியும் .தற்போதய சூழலில் காங்கிரசும் ,பிஜேபியும்  தலா 100 இடங்களிலிருந்து 150 இடங்களுக்குள்தான் வருவார்கள் என்பது நடுநிலை கணிப்பாளர்களின் கணிப்பு . வடஇந்திய , கார்ப்பரேட் ஆதரவு ஊடகங்கள் பிஜேபி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கணிக்கின்றன. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் ஜெயா நிச்சயம் அவர் நண்பர் மோடி பின்னால்தான் போவார். இதில் சந்தேகம் இல்லை . திமுக பாஜாகவோடு ,காங்கிரசை ஆதரிப்பதாலும் , ஜெயாவின் நிலைப்பாட்டாலும், தனது முக்கிய ஆதரவாளர்களான சிறுபான்மையினரின் ஆதரவை இலக்க விரும்பமாட்டார்கள் என்பதாலும் ,நிச்சயம் போகமாட்டார்கள் .


இடதுசாரிகள் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டாலோ ,மூன்றாம் அணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டாலோ , தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என்ற நிபந்தனை நிச்சயம் போடுவார் .இடது இயக்கங்களில் சிறந்த தேசிய தலைவர்கள் இருக்கும்போது அம்மா தலைமையில் இயங்க த.பாண்டியன் தவிர மற்றவர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. மூன்றாவது அணியில் மேலும் இதே நிபந்தனையை வைக்ககூடியவர்கள் மாயாவதி ,மம்தா ,நாயுடு , முலாயம் ,நிதீஷ் குமார்,தேவே கௌடா ,மற்றும் பலர் . இவர்களில் யாரை ஒத்துக்கொள்ள முடியும் .
அடுத்ததாக திமுகவை பார்ப்போம் .திமுகவோடு உறவுகளை முறித்துக்கொண்டதற்கு நியாயங்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை .ஊழல் என்பது திமுக ,திமுக ,இருவருக்கும் பொதுவான குற்றச்சாட்டு என்று எடுத்துக்கொள்வோம் .வேறு காரணங்கள் என்ன என்று பார்த்தால் ஆட்சியில் திமுக ,காங்கிரசோடு கூட்டில் இருந்ததுதான் . இடது இயக்கங்களும் ஆரம்பத்தில் வெளியே இருந்து ஆதரித்தன . பின்னால் நல்ல காரணத்தோடு ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டன .திமுக ஆட்சிக்கு உள்ளே இருந்ததால், காங்கிரசின் அச்சுறுத்தல் காரணமாக வெளியே வர தாமதம் ஆனது என்பதுதான் உண்மை .2G வழக்கில் திமுக பந்தாடப்பட்டது திமுகவிற்கு வேறு வழி இல்லாமல் போனது . சுதாரித்தபிறகு வழியே வந்து விட்டது .
இப்போது மீண்டும் காங்கிரசோடு நெருங்கி வருகிறதே என்று கேட்கலாம் . அதற்கு காரணம் இடதுசாரிகள்தான் . வெளிய வந்தபின் திமுக இடதுசைகளோடு சேர துடித்தது .ஆனால் த.பாண்டியன் போன்ற ஜெயலலிதா விசுவாசிகள் சுயநலத்தின் காரணமாக துண்டிக்கப்பட்டது .த. பாண்டியன் தான் கட்சியில் இருக்கும் சிலரை நிலமோசடி , கொலை மற்றும் குற்ற வழக்குகளில் இருந்து காப்பதற்காக அம்மாவோடு சமரசம் செய்துக்கொண்டு அம்மா விசுவாசியாகிவிட்டார் .இதில் நல்லக்கன்னு போன்ற அப்பழுக்கற்ற தலைவரையும் இந்த விசயமாக அழைத்துப்போய் அம்மாவை பார்க்கிறார் என்பது வேதனை அளிக்கிறது . அவருக்கு ராஜிய சபா MP பதவிக்காக எடுத்த முயற்சி எடுபடாமல் அது ராஜாவிற்கு போன விசயம் வேறு. மார்க்ஸிஸ்ட் களும் காலியாகும் ராஜிய சபா MP சீட்டிற்காகதான் வலதுகளின் நிலைபாட்டை தொடர விரும்புகிறார்களா என்று தெரியவில்லை .
சென்ற ராஜிய சபா MP தேர்தலில் திமுக காங்கிரெசை அணுகுவதற்கு முன்பே கம்யூனிஸ்ட்களயும் ,தேமுதிக வையும் தான் நெருங்கினார்கள் .அப்போது உட்கார்ந்து பேசி இருந்தால் ,ராஜாவிற்கோ ,அல்லது விஜயகாந்த் மைத்துனருக்கோ ,திமுக வரும் நாடாளுமன்ற தேர்தலை மனத்தில் வைத்து வீட்டுக்கொடுத்திருக்கும்.ஆனால் அதை முறியடித்து காங்கிரெஸ் பக்கம் திமுகாவை தள்ளியது த.பாண்டியன் போன்ற ஜெயா விசுவாசிகள்தான் .பின்னால் மார்க்ஸிஸ்ட்களுக்கும் வேறு வழி இல்லாமல் போனது . ஜோதிபாசு போன்றவர்களையே பிரதமராக வரவிடாமல் செய்த பெருமை அவர்களுக்குண்டு .
இப்போது திமுகவிற்கு வேறு வழி இல்லை .அது காங்கிரசுடானோ ,பிஜேபியுடனோதான் கூட்டு சேர்ந்தாக வேண்டும். திமுக பாஜாகவோடு கூட்டு சேராது என்று நம்பலாம் .அப்படி சேர்ந்தால் அதன் 32% வாக்கு வாங்கி 25% ஆகிவிடும் . அதனுடைய முக்கிய ஆதரவாளர்களான முஸ்லிம்கள் 90% இருந்து 55% ஆனதற்கு முன்பு திமுக பாஜாகவோடு கூட்டு சேர்ந்து அதன் நம்பிக்கை தன்மை குறைந்து போனதுதான் காரணம் . இன்றும் பல முஸ்லிம்கள் அதை மன்னிக்க தயாரில்லை . இந்தமுறை திமுக அந்தத்தவரை செய்ய , முயன்று இன்றும் ஆதரிக்கும் 55% முஸ்லிம்களின் ஆதரவை நிரந்தரமாக இலக்க சம்மதிக்க மாட்டார்கள் என்று நம்பலாம் .இந்தமுறை பிஜேபியை ஆதரித்தால் நிச்சயம் எந்த முஸ்லிமும் மன்னிக்க மாட்டான் .
நிச்சயம் திமுகவின் நகர்தல் இடதுசாரிகள் அல்லது மூன்றாவது அணி நோக்கித்தான் இருக்கும் .ஆனால் இடதுசாரிகளும் , ஜெயலலிதாவுக்கு ஆதரவு மற்றும் பயந்த மீடியாக்களும் திமுகவை காங்கிரெஸ்ஐ நோக்கி தள்ளுகிறார்கள் .மேலும் ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் என்று சொல்லிகொள்பவையும் அதை ஊக்குவிக்கின்றன. ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் ,விடுதலைப்புலிகள் குறித்த கண்ணோட்டத்தை வசதியாக ,அவர்கள் மற்ற விசயங்கள்போல் மறந்துவிட்டார்கள் .நடுநிலை ஏடுகள் என்று சொல்லிகொள்பவை ஜெயாவின் ஆட்சியை விமர்சிக்க தைரியமோ ,விளம்பர வருமானத்தை இலக்கவோ ,தைரியம் இல்லாமல் சார்பு நிலையை கடைபிடிக்கின்றன .
வரும் பொதுத்தேர்தலில் இடதுசாரிகள் ,அதிமுக கூட்டு மதவாத சக்திகளுக்குத்தான் துணைபோகும் . இடது ஆதரவாளர்களின் விருப்பம் திமுக இடதுசாரிகள் கூட்டணிதான் . ஆனால் த.பாண்டியன் போன்ற தலைமை இருக்கும்போது இது நடக்காது என்பது தெரியும் .ஜீவா , கல்யாணசுந்தரம் ,ராமமூர்த்தி ,நல்லக்கன்னு போன்ற அப்பழுக்கற்ற தமிழக பொதுஉடமை தலைவர்களின் வழிகாட்டல் இப்போதைய தேவை .த.ப போன்றவர்கள் இடது இயக்கங்கள் மாசுபடவே துணைபோவார்கள் .